Wednesday, October 13, 2010

தீவுகளின் வாழ்க்​கைப் ​போராட்டம்

ந்த வருஷம் வெயில் அதிகம்பா, வெயில் காலத்துல மழை பிய்ச்சு உதறுது, சென்னையில கல்மழை பெய்யுதாமே... என்று நம்மில் பலரும் பேசி இருப்போம். ஆனால் அதற்கான காரணத்தை அறிய முற்படும்போதுதான் மயக்கம் வருகிறது.
உலகின் இன்றைய மிகமுக்கியப் பிரச்சினை புவிவெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றம். ஆனால் நம்மில் பலருக்கும் அதைப்பற்றிய அக்கறை சுத்தமாக கிடையாது. அட நம்மலால எப்படிப்பா பூமி வெப்பமாகும் என்று அங்கலாய்ப்பவர்களுக்கு சில கேள்விகள்.
1. பிளாஸ்டிக் குப்பைகளை மற்ற குப்பைகளிலிருந்து பிரித்து வைத்திருக்கிறீர்களா?
2. டயர், பிளாஸ்டிக், மைக்கா போன்றவற்றை எரிக்காமல் இருந்திருக்கிறீர்களா?
3. பெட்ரோல் வாகனங்களை (கார், பைக்) ஓட்டாமல் இருந்திருக்கிறீர்களா?
தவாருவா தீவு
இந்தக் கேள்விகளில் ஒன்றிற்காவது இல்லை என்று பதில் கூறினாலும் நிச்சயமாக பூமிவெப்பமடைய நாமும் ஒரு காரணம்தான். உலக வெப்பமயமாதலால் பனிமலைகள் உருகும். கடல் மட்டம் உயரும் என்பதெல்லாம் திரும்ப திரும்ப சொல்லப்படும் விஷயங்கள் ஆனால் அவ்வாறு உருகும்பட்சத்தில் பெரிதும் பாதிக்கப்படுவது கடல் நடுவில் குட்டி குட்டியாக தோற்றமளிக்கும் சிறு சிறு தீவுகள்தான். கடல்மட்டம் உயரும் போது நிலப்பரப்பை அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகள் கூட அதைச் சமாளிக்கும் ஆனால் கடல் நடுவே வாழும் மக்களை பற்றி சிந்தித்துப் பாருங்கள், இயற்கை தந்த அழகுச் சோலைகளாய் இன்று காட்சியளிக்கும் தீவுகள் அனைத்தும் கடலில் மூழ்கி இருந்த இடம் தெரியாமல் போகும்.
​பெர்முடா தீவு
​போர்​டோ ரிக்​கோ
சரி விஷயத்துக்கு வருவோம். இந்தியா, சீனா போன்ற 4 வளரும் நாடுகள் இனைந்து BASIC என்ற அமைப்பினை ஏற்படுதிதியுள்ளன (B - பிரேசில், AS - தென்ஆப்பிரிக்கா, I - இந்தியா, C - சீனா). கடந்த ஆண்டு நடந்த கோபன் ஹேகன் மாநாட்டில் இந்தியா, சீனா உள்ளிட்ட உலகநாடுகள் வைத்த கோரிக்கைகளை வளர்ந்த நாடுகள் ஏற்றுக்கொள்ள மறுத்தன. கோரிக்கை என்னவென்றால் 1990ல் இருந்த புவிவெப்பநிலையிலிருந்து 2டிகிரி செல்சியஸ் க்கு மேல் ஏறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என உலகநாடுகள் வளர்ந்த நாடுகளிடம் வலியுறுத்தின. ஆனால் வளர்ந்த நாடுகள் 2000ல் இருந்த வெப்பநிலையிலிருந்து 2டிகிரி செல்சியஸ் ஏறாமல் பார்த்துக்கொள்கிறோம் என புரட்டிப் போட்டார்கள். ஆனால் இது கூட முழுக்க முழுக்க வளர்ந்த நாடுகளின் நிர்பந்தத்தாலேயே கோரப்பட்டது. ஏனெனில் குட்டித்தீவுகளின் அமைப்பான AOSIS (Association Of Small Island States) வெப்பநிலையை 1.5டிகிரி செல்சியஸ் க்கு அதிகமாகக் கூடாது என போராடியது. இந்த தீவுக்கூட்டங்களின் கூக்குரலை யாரும் சட்டை செய்யவே இல்லை பிரச்சினை பெரிதாகி பூதாகரமாகும் தருவாயில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் புவிவெப்பமடைவதற்கான பழியை வளரும் நாடுகளின் மீது போட்டது. ஆனால் உண்மை என்னவென்றால் வளர்ந்த நாடுகள் 50 வருடங்களுக்கு முன்பு அடைந்த வளர்ச்சியைக் கூட இன்னும் எட்டாத நிலைதான் நமக்கு.
உலகமே பாதிக்கப்படும் போது வளர்ந்த நாடு, வளரும் நாடு, குட்டித் தீவுகள் என்ற பாரபட்சம் எதற்கு? எல்லோரும் சேர்ந்து செயல்படவேண்டியதுதானே என்று அளவுக்கு அதிகமான போதையில் இருந்தபோது என்னுடைய சிறுமூளையில் தோன்றியது. ஆனால் மயக்கம் தெளிந்த பிறகே உண்மை புரிந்தது. புவிவெப்பமயமாதலின் விளைவாக நாடுகளுக்கிடையே ஏற்படும் உடன்பாடுகளால் அதிகப்படியான நிதிச்சுமை ஏழை நாடுகளுக்கு மட்டுமே! நிதிச்சுமையைத் தாங்கக்கூடிய சக்தி மற்ற ஏழை நாடுகளுக்கு உண்டா என்றால் நிச்சயமாக இல்லை என்பதுதான் பதில். புவிவெப்பமயமாதலைத் தடுக்கும் விதமாக பல உபகரணங்கள் (சோலார் விளக்குகள், சோலார் ரிக்ஷா) இப்போது சந்தையில் இருக்கின்றன. இவையனைத்தும் யார் மொத்தமாகத் தயாரிக்க முடியும்? எடுத்துக்காட்டாக வளர்ந்த நாடுகள் தங்களுடைய தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இந்த உபகரணங்களை மிகவும் குறைந்த விலையில் தயாரிக்கும், அதே பொருளைத் தயாரிக்க பின்தங்கிய நாடுகள் பத்து மடங்குக்கும் அதிகமாக செலவு செய்ய வேண்டிவரும். இந்தச் சூழ்நிலையில் வளரும் நாடுகள் அந்த உபகரணங்களை மொத்தமாக உற்பத்தி செய்கின்ற நாட்டிடமிருந்து வாங்கும்போது இலாபம் யாருக்கு? 
வளர்ந்த நாடுகளில் ஏற்பட்ட தொழில் புரட்சியின் பின்விளைவே இன்றைய புவிவெப்பமயமாதலும் ஓசோனில் விழுந்த ஓட்டையும். காரணமும் அவர்களே! இலாபமும் அவர்களுக்கே! தயிரிலிருந்து வெண்ணை எடுப்பவர்களை பார்த்திருப்போம், தண்ணிரிலிருந்து வெண்ணை எடுக்கும் கூட்டமும் இங்கேதான் இருக்கிறது.
​தை​மோர் தீவில் வாழும் ​பெண்கள்
இந்த வாரம் சீனாவின் தியான்ஜின் நகரில் கூடிய மாநாட்டில் BASIC மற்றும் AOSIS நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு புவிவெப்பமயமாவதைப்பற்றி விவாதித்தனர். இது உலகஅரங்கில் மிகச்சிறந்த ஒரு நிகழ்வாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இதுநாள் வரையில் வளரும் நாடுகளின் மீது பழி போட்ட வல்லரசுகள் இந்த குட்டித்தீவுகளின் கோரிக்கைகளை தங்களுடைய சுயலாபத்துக்கென பயன்படுத்தி வந்தன. ஆனால் தற்போது இந்தியா மற்றும் சீனாவின் கடும் முயற்சியினால் குட்டித்தீவுகளின் அமைப்பான AOSIS மற்றும் வளரும் நாடுகளின் அமைப்பான BASIC ஆகியவை நெருங்கி வந்துள்ளன. மாநாட்டில் ஒருமித்த கருத்து இன்னும் ஏற்படவில்லையெனினும் இந்த நெருக்கம் வளர்ந்த நாடுகளுக்கு விடப்பட்ட சவாலாகவே கருதப்படுகிறது.
எது எப்படியோ சிறிய தீவில் வாழ்ந்தாலும் பெரிய நாட்டில் வாழ்ந்தாலும் மனித சமுதாயம் காக்கப்படவேண்டும். இன்றைய பொழுது கழிந்தால் போதும் என்று நினைக்காமல் நாளைய தலைமுறை சிறப்புற்று வாழ இப்போதே நாம் அதற்கான முயற்சியில் ஈடுபடவேண்டும் என்பதே என்னைப்போன்ற பெருங்குடிமகன்களின் விருப்பம்.

2 comments:

  1. இன்னும் சில வருஷங்கள்ல மடகாஸ்கர் தீவே இருக்காதாமே... பதிவ படிச்சுட்டு ஒபாமா எனக்கு மெயில் அனுப்பியிருந்தாரு... என்ன பண்ணலாம்னு ஆலோசனை வேற கேட்டார்... நான் நம்ம அம்பத்தூர் டாஸ்மாக் வரசொல்லிட்டேன்... அங்க உக்காந்து இது பத்தி பேசலாம்னு...

    ReplyDelete
  2. அடிச்சு விடுங்க நண்டு... நீங்க ​சொன்ன அந்த பார்லதான் ​ரொம்ப ​நேரமா ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின்கூட உக்காந்துட்டு சரக்கு அடிச்சுட்டு இருக்​கேன்... இது எப்புடி?

    ReplyDelete